Friday, April 30, 2010

பள்ளி பள்ளி!

பொதுவாகவே பொது போக்குவரத்தை விட தனியார் டாக்சி போன்றவற்றின் கட்டணம் அதிகமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அதிலும் வெளிநாட்டில் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பதை முன்பு ஒரு "இடுகையில்" சொல்லி இருக்கிறேன்.

இதன் காரணமாகவே வெளிநாட்டில் "மெட்ரோ" எனப்படும் உள்ளூர் ரயில்களின் பயன்பாடு பொது மக்களின் அன்றாட வாழ்கையில் ஒரு அங்கமாகிறது, தென்கொரியாவும் அப்படித்தான்.

இந்தியாவில் "மெட்ரோ" என்றும், சிங்கையில் "எஸ்.எம்.ஆர்.டி" என்றும் ஜப்பானில் "ஜே.ஆர்.டி" அழைக்கும் உள்ளூர் ரயில்கள்களுக்கு தென்கொரியாவில் "கோ-ரயில்" "மெட்ரோ" என்று பெயரிருந்தாலும் அவர்கள் இணையதளம் முதல் அனைவராலும் செல்லமாக "சப்வே" என்றே அழைக்கப்படுகிறது.



இதன் காரணம் கொரியாவில் ரயில் பாதைகள் முழுவதும் பூமிக்கு அடியில் மூன்று முதல் நான்கு அடுக்கு வரை அமைக்கப்பட்டு இருப்பதால்தான் என்று நினைக்கிறேன். ஒரு சில இடங்களில் வெளியில் வந்தாலும் (படத்தில் உள்ளது போல) அடுத்த இரு நிமிடத்துக்குள் மீண்டும் பூமிக்கு அடியில் சென்று விடும், காரணம் இங்கு மேடு பள்ளமான மலைப்பகுதிதான் அதிகம்.

முன்பு கொரியன் மொழியில் மட்டுமே எழுதி இருக்கும் அறிவிப்பு பலகைகள் மற்றும் ரயில் பெயர் பலகைகள், இப்போது சில வருடங்களாக ஆங்கிலத்திலும் இருக்கும்படி மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்த முன்னுரையுடன் இனி இந்த இடுகைக்கான விசையத்தை பார்ப்போம்.

தென்கொரியாவில் வந்து இறங்கியவுடன் உங்கள் காதில் படும் முதல் வார்த்தை "பள்ளி பள்ளி" யாகத்தான் இருக்கும், "ஸ்கூல்" இல்லைங்க, "பள்ளி பள்ளி" என்றால் கொரியன் மொழியில் "வேகமாக வேகமாக" (Hurry-up Hurry-up) என்று அர்த்தம்.

எங்கு பார்த்தாலும் மக்களும் ஓடியவண்ணமே இருப்பார்கள், வந்த புதிதில் எனக்கு அனைவரும் ஏதோ பரபரப்பாக இருப்பதுபோல் வித்தியாசமாக பட்டாலும், இங்கு அனைவருமே இப்படிதான் என்று விரைவில் புரிந்துவிட்டது.

இரயில் நிலையங்களிலும் இப்படிதான், அதிலும் அலுவலக துவக்க மற்றும் முடியும் நேரம், வார இறுதி இரவு நேரம் என்றால் கேட்கவே வேண்டாம், எந்த கப்பலை பிடிக்க இப்படி ஓடுகிறார்கள் என்று நினைக்க தோன்றும்.



இப்படி யோசித்த படி இரயில் நிலையத்தை அடைந்தால் (ஒவ்வொரு பத்து நிமிட நடை தூரத்திலும் சாலை ஓரத்தில் அடுத்தடுத்த நிலையங்கள் இருக்கும்)

அங்கு ஏதோ வித்தியாசமாக படும்!, அது என்னவென்றால் இறங்கி செல்ல படிக்கட்டுகள் மட்டும்தான் இருக்கும் (இது முதல் தளம்), சாலையின் மறு புறத்தில் "லிப்ட்" இருக்கும் அதை பற்றி கீழே சொல்கிறேன்.

சரி, ஒரு இருபது படிகள்தானே என்று இறங்கி திரும்பினால் அங்கிருந்து ஒரு இருபது படிகள் இருக்கும், மீண்டும்அதில் இறங்கினால் ஒரு இரண்டு நிமிட நடை பாதை இருக்கும் அதில் நடந்தால் அங்கே மீண்டும் ஒரு இருபது படிகள் இருக்கும்.

இந்த இடத்தில நகரும் படிக்கட்டுகள் இருக்கும், ஆனால் அது ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு இருபது நிமிடம் வேலை செய்தால் அதிசியம்தான், எப்போதும் அனைத்து வைக்க பட்டிருக்கும்.

சரி, வேதாளத்தை தூக்கியாச்சு சுமந்து தொலைப்போம் என்று அதில் இறங்கினால் இங்கே டிக்கெட் எடுக்க மற்றும் டிக்கெட்டை கொடுத்து உள்ளே நுழைய தடுப்புகள் இருக்கும் (இது இரண்டாவது தளம்).

இதை தாண்டி உள்ளே போனால் அங்கே மீண்டும் ஒரு இருபது படிகள் இருக்கும் அதில் இறங்கினால்தான் தெய்வத்தை காண்பது போல ரயில் தண்டவாளங்களை பூமிக்கு அடியில் மூன்றாவது தளத்தில்தான் கண்ணில் காணமுடியும்.



என்ன கொடுமை இது என்றால்!, இளைய மக்கள் நடக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடற்பயிற்சியாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

ஆமாம் சரிதானே, நடந்தால் நல்லதுதானே! என்று அவசர பட்டு நினைக்க வேண்டாம், மறு முனையில் இப்போது இறங்கி வந்ததை போலவே ஏறி செல்ல வேண்டும் என்பதை நினைத்து பாருங்கள்?

அதிலும் நான் சொன்னது ஒரு பத்து நிமிட நடையில் போக கூடிய தூரத்தில், ஒரே ஏரியாவில் இருக்கும் இரு சிறு நிலையங்கள்.

பெரிய நிலையங்களில் படிகளும் நடை நிமிடமும் கூடும், அதை விட தூரமாக போகும் போது ஒரு ட்ராக்கிலிருந்து மறு ட்ராக்குக்கு மாறும் போதும் இதே நிலைதான், சுமார் ஒரு முப்பது கிலோமீட்டர் பயணத்தில் மூன்று முறை இது போல் இறங்கி ஏறி "ட்ராக்" மாறவேண்டும்.

எனக்கு வந்த புதிதில் ஒரு முறை ரயிலில் செல்வதே பழனி மலை ஏறி திருப்பதி மலையில் இறங்குவதை போல "கண்ணை கட்டியது".

சாப்பிட இந்திய உணவகம் போனால் சாப்பிட்டு விட்டு ஒரு பார்சல் வாங்கிவர வேண்டும், வீடு வரும் முன் சாப்பிட்டது ஜீரணமாகி விடும், இதுவே விசா, மருத்துவம் என்று ஒரே நாளில் இரண்டு வேலைக்காக சில சமயம் போக நேர்ந்தால் நினைத்து பாருங்கள்?

இத்தனை கலோபரதிலும் உங்கள் நடை சற்று மெதுவானால் "பள்ளி பள்ளி" என்று பின்னால் இருந்து குரல் கேட்கும் போது, இதிலும் தினம் ஓடுகிறார்களே என்று வியக்க வைக்கும்.

எனக்கு இப்படி குரல் கேட்கும் போதெல்லாம் "படியேறி படியேறியே பாதி வாழ்கை பாழாய் போவதைத்தான்" சுருக்கி "பள்ளி பள்ளி" என்று வைத்தார்களோ என்ற நினைப்புதான் வரும்.

ஜப்பான், சிங்கை போன்ற நாடுகளில் இருந்து பழகியவர்கள் இங்கே வந்தால் சீக்கிரம் உடல் எடை பாதியாக குறைந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சரி, சாலையின் மறு புறம்தான் லிப்ட் இருக்கிறதே அதை பயன் படுத்தி பார்ப்போம் என்றால், அதில் சில விதிமுறைகள் இருக்கிறது, மேலும் இன்னொரு விசையம் எனக்கு இன்னும் புரியவில்லை.

என் குழப்பம் என்னவென்றால், சாலை ஓரமாக இருக்கும் "லிப்ட்" நேராக மூன்றாவது தளரயில் ட்ராக்கை சென்று அடையும் படி அமைக்க பட்டு இருக்கிறது.

நடுவில் நம் பயணஅட்டையில் பணத்தை "டாப் அப்" செய்யவோ அல்லது டிக்கெட் எடுக்கவோ அல்லது டிக்கெட்டை கவுண்டரில் கொடுக்க வேண்டும் என்றால் இரண்டாவது தளத்தில்தான் இறங்க வேண்டும், அப்படி செய்தால் மீண்டும் மூன்றாவது தளத்துக்கு போக படிகளைதான் பயன் படுத்த வேண்டும்.



படிகளின் ஓரத்தில் சக்கர நாற்காலியில் வருபவர்களை சுமந்து செல்லும்படி வசதிகளும் அமைக்கபட்டு இருக்கிறது.ஆனாலும் சாலையில் இருந்து நேராக ட்ராக்கை சென்று அடைவோ அல்லது ட்ராக்கில் இருந்து நேராக சாலைக்கு வரவோ எந்த ஒரு டிக்கெட் பரிசோதிக்கும் முறையும் இல்லாமல், ஏன் இருக்கிறது என்று புரியவில்லை.

இந்த லிப்ட் வசதியை முதியவர்கள், கர்பிணி அல்லது கை-குழந்தையுடன் இருக்கும் பெற்றோர்கள், முடமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறது.

இதை அந்தந்த நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு அறையில் இருந்து கேமிரா மூலம் கண்காணிக்கிறார்கள், இளையர்களும் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை.

மொத்தத்தில் என்னதான் உடற்பயிற்சியை காரணம் காட்டினாலும், மற்ற தொழில் நுட்பத்தில் எல்லாம் அசுர வேகத்தில் முன்னோடியாகிக்கொண்டு வரும் தென்கொரியாவில் "மெட்ரோ" ரயில் பயணம் என்பது மற்ற நாடுகளை காட்டிலும் கொஞ்சம் கடினமாகவே தெரிகிறது.

மீண்டும் சந்திப்போம், என் பக்கத்தில் உங்கள் நேரத்திற்கு நன்றி!.

19 பின்னூட்டம்:

Menaga Sathia said...

ஏன் கமெண்ட் வேலை செய்யவில்லை.....

Menaga Sathia said...

ஓஓ சாரி நாந்தான் அவசரப்பட்டு வேலை செய்யலைன்னு நினைச்சுட்டேன்.1 கமெண்ட் போடும்போது எரர் வந்தது...

Chitra said...

விரிவாக நல்லா எழுதி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

GEETHA ACHAL said...

//எனக்கு வந்த புதிதில் ஒரு முறை ரயிலில் செல்வதே பழனி மலை ஏறி திருப்பதி மலையில் இறங்குவதை போல "கண்ணை கட்டியது".//ஏப்படி...

மிகவும் அருமையாக எழுதி இருக்கின்றிங்க...இங்கேயும் அப்படி தான்...நாங்கள் இரண்டு மூன்று முறை தான் ரயிலில் பயணம் செய்து இருக்கின்றோம்..ஆனால், இதே மாதிரி தான் அனுபவம்...அக்ஷ்தாவினை அவங்க அப்பாவிடம் தூக்கிசொல்லிவிட்டு, நான் ஹாயாக நடந்ததுக்கே..அப்பாடா என்று ஆகிவிட்டது......

ஹேமா said...

நகைச்சுவையாக உங்கள் அனுபவத்தயும் அது தரும் அலுப்பையும் படியேறிக்கிட்டே சொல்றமாதிரி சொல்லியிருக்கீங்க சிங்கா.உண்மையாவே புதுசா ஒரு விஷயம் அறிஞ்சமாதிரி இருக்கு.

INDIA 2121 said...

SUPER
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

Jaleela Kamal said...

நானும் மேனகா சொல்வது போல் தான் நினைத்து வந்தேன், பள்ளி பள்ளி என்றதும், உங்கள் பள்ளி வாழ்க்கையோன்னு,,

இதுவும் சரியான கட்டுரை தான்

சிங்கக்குட்டி said...

@Mrs.Menagasathia உண்மைதான் மேனகா, நானும் பார்த்தவரை இந்த சப்வே விசயத்தில் மற்ற நாடுகள் தேவலம்.

சிங்கக்குட்டி said...

@Chitraநன்றி சித்ரா :-).

சிங்கக்குட்டி said...

@Geetha Achalவாங்க கீதா,

//அவங்க அப்பாவிடம் தூக்கிசொல்லிவிட்டு, நான் ஹாயாக நடந்ததுக்கே//

அதெப்படி இந்த விசையத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறீர்கள் :-).

சிங்கக்குட்டி said...

@ஹேமாநன்றி ஹேமா,

ரொம்ப நாளாச்சு! எப்படி இருக்கீங்க?

சிங்கக்குட்டி said...

@VAAL PAIYYANநன்றி வால் பையன், கவலைய விடுங்க கண்டிப்பா படிக்கிறேன்.

சிங்கக்குட்டி said...

@Jaleelaநன்றி ஜலீலா,
என் பள்ளி வாழ்கையை சொல்ல ஒரு பதிவு பத்தாது, அத்தனை பள்ளியில் படித்து இருக்கிறேன் :-).

அன்புடன் நான் said...

கட்டுரை மிரட்டலா இருக்கு...
வித்தியாசமான நடைமுறை....
பகிர்வுக்கு... நன்றிங்க

உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்.

கிரி said...

//"பள்ளி பள்ளி" என்றால் கொரியன் மொழியில் "வேகமாக வேகமாக" (Hurry-up Hurry-up) என்று அர்த்தம். //

திருப்பதி ஜருகண்டி மாதிரியா! ;-)

//என்ன கொடுமை இது என்றால்!, இளைய மக்கள் நடக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடற்பயிற்சியாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.//

நிஜமாகவா!

//இத்தனை கலோபரதிலும் உங்கள் நடை சற்று மெதுவானால் "பள்ளி பள்ளி" என்று பின்னால் இருந்து குரல் கேட்கும்//

ஹா ஹா ஹா நம்ம ஆளுங்க முக்கி முக்கி போவாங்களே!

சிங்கக்குட்டி நன்கு சுவாராசியமாக இருந்தது..உங்க பையன் எப்படி இருக்கிறான்? வேலை இப்ப உங்களுக்கு அதிகமாக இருக்கும். இருவரும் மாற்றி மாற்றி சேட்டை செய்துகொண்டு இருப்பார்கள் :-)

Priya said...

நல்லா எழுதி இருக்கீங்க....சுவாரசியமா இருக்கு!

சிங்கக்குட்டி said...

@சி. கருணாகரசுஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கும் மிக்க நன்றி சி.கருணாகரசு.

சிங்கக்குட்டி said...

@கிரி//திருப்பதி ஜருகண்டி மாதிரியா! ;-) //

கிரி...மீறு மனவாளா? ஏ ஊரய்யா மீ தி?

(சும்மா நான் சப்போர்ட் பண்ணும் ஒரு அப்ளிகேசன் பொண்ணு ஆத்திரா, அவங்க கிட்ட பேசி பேசி கத்துகிட்டது)

நானே நொந்துகிட்டுதான் நடப்பேன் :-)

நன்றி கிரி.

பையனும் பொண்ணும் அருமையாக இருக்கிறார்கள், சேட்டையா? எனக்கு நேரமே கிடைப்பதில்லை, அதனால்தான் நண்பர்கள் பதிவுக்கு கூட படித்துவிட்டு ஓட்டளிப்பதோடு சரி பின்னூட்டம் போட முடிவதில்லை.

உங்க பையன் எப்படி இருக்கிறார்?

சிங்கக்குட்டி said...

@Priyaமிக்க நன்றி பிரியா , தொடர்ந்து வாங்க உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் விசையம் இருக்கும்.

Post a Comment

 

Blogger Widgets